பெண் எஸ்.பி.,,க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 June 2023

பெண் எஸ்.பி.,,க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வக்கீல்கள், தங்கள் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். இதையடுத்து இவ்வழக்கில் வருகிற 16ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது. அதுபோல் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் தரப்பு வக்கீல்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.


இந்த வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வக்கீல்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜரானார். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.


அதனை தொடர்ந்து, அரசு தரப்பு வக்கீல்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வக்கீல் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் வக்கீல் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.


இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, இன்று  இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார். கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வந்த இவ்வழக்கில் இன்று  தீர்ப்பு வெளியாகி உள்ளது. பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் இரண்டு பிரிவுகளில் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூபாய் 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad