நகரத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு பெரும் சவாலாக இருப்பதோடு, திணறி வருகின்றனர். குறிப்பாக ரோசணை பகுதியில் போதைப்பொருட்களின் விற்பனை கொடி கட்டி பறந்து வருகிறது. அடிக்கடி அப்பகுதியில் கஞ்சா போதையில் அடி தடி சம்பங்களும், நடந்தேறி வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பள்ளி/ கல்லூரி மாணவர்களும் சீரழிந்து வருகின்றனர். கடந்த வாரம் ரோசணை பகுதியில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் வைத்திருந்த கிடங்கலான் என்கின்ற சரண்ராஜ்(31), என்பவரை ரோசணை போலீசார் கைது செய்தனர். ரோசணை பகுதியில் கஞ்சா மற்றும் சாராய விற்பனையால் அச்சுறுத்தும் சம்பவங்கள் நடப்பதால், அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ரோசணை பகுதி பொதுமக்கள் அனைவரும் முன்வந்து, போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அம்பேத்கர் சிலை அருகே, சுமார் 50 பேர் ஒன்று கூடி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி நேற்றிரவு விழிப்புணர்வு பதாகை வைத்தனர். அதில், இந்த பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, சாராயம் மற்றம் போதைப்பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறுபவர்கள் மீது காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எழுதி வைத்துள்ளனர். மேலும், அவ்வாறு விற்பனையில் ஈடுபட்டால், போலீசாரிடம் தகவல் தெரிவிக்க ஒரு செல்போன் நம்பரையும் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தொடர்ந்து இப்பகுதியில் போதை பொருட்கள் விற்கப்படுவதாக ரோஷணை போலீசாருக்கு புகார்கள் தெரிவித்து வருகிறோம். பெயரளவிற்கு மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் போலீசாருக்கு முன் உதாரணமாக நாங்களே எங்கள் பகுதியில் போதை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து பதாகை வைத்துள்ளோம் என்றனர். பொதுமக்களே முன்வந்து போதைப் பொருளுக்கு தடை விதித்து விழிப்புணர்வு பதாகை வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment