தமிழ்நாடு முதலமைச்சர், விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ், கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதை முன்னிட்டு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., தலைமையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.புகழேந்தி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று (25.04.2023) பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்திடும் வகையில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும், மாவட்டங்களில் சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா, நலத்திட்ட உதவிகள் பொதுமக்கள் சென்றடைந்துள்ளதா என்பது குறித்து, மாவட்டந்தோறும் நேரில் சென்று "கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின்கீழ் அரசுத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மற்றும் கள ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து 26.04.2023 மற்றும் 27.04.2023 ஆகிய தேதிகளில், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள். அந்த வகையில், நாளை (26.04.2023) மாலை 4.00 மணி அளவில் முதல் நிகழ்ச்சியாக மாவட்டத்தினைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்கள். தொடர்ந்து, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
மேலும், 27.04.2023 அன்று காலை 9.30 மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த அரசுத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மற்றும் கள் ஆய்வும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகளில், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அமைச்சர் பெருமக்களும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

இதுமட்டுமல்லாமல், அனைத்துறைகளைச் சேர்ந்த அரசுச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். அதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திரு.ம.ஜெயச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்ரீநாதா,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி மு.பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் திரு.சுரேந்திரஷா உட்பட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment