விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர். எக்கியாா்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 63 பேர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 14 பேர் உயிரிழந்தனா். முன்னதாக, மரக்காணத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.


அதன்படி, சிபிசிஐடி டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் விழுப்புரம் மாவட்ட விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியும் செங்கல்பட்டு அதிகாரியாக மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி கோமதியிடம் இவ்வழக்கு தொடர்பான வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தார். ஆவணங்களின் அடிப்படையில் விரைவில் சிபிசிஐடி விசாரணை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலியான சம்பவத்தில் 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment